சென்னை: கடும் மழை, வரத்து குறைவு ஆகிய காரணங்களால் வெங்காயத்தின் விலை தமிழகத்தில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இல்லத்தரசிகளின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது வெங்காயம். அது சிறியதோ, பெரியதோ அதன் பங்கு இல்லாமல் சமையல் ருசிப்பதில்லை.
வெங்காயத்தால் ஆட்சியே கவிழ்ந்த வரலாறு இருக்கிறது. இந்த நிலையில், அண்மைக்காலமாக வெங்காயத்தின் விலை பொதுமக்களுக்கு கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு மாதம் முன்பு வரை கிலோ 40 முதல் 60 ரூபாய் என்று இருந்த பெரிய வெங்காயம் 80 ரூபாய் என்ற விலையை தொட்டிருக்கிறது. அதன் விலை இனி வரும் நாட்களில் மேலும் உயரும் என்று வியாபாரிகள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விற்கப்படும் வெங்காயம், பெருமளவு மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
அந்த மாநிலங்களில் கடும் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், தமிழகத்துக்கு வரவேண்டிய பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்திருக்கிறது. அதுவே, ஒரு கிலோ 50 (இது கடந்த வார விலை) வரை கொண்டு போய்விட்டது.
தற்போது வரத்து குறைவின் காரணமாக 1 கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்திருக்கிறது. அதன் விலையும் கிலோ 80ஐ தொட்டிருக்கிறது.
மழை நீடிக்கும் பட்சத்தில் வெங்காயத்தின் விலை கூடிய சீக்கிரம் 100 ரூபாயை எட்டிபிடிக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளனர். மழை, விளைச்சல் குறைவு, விலையோ உயர்வு என வெங்காயம் பொதுமக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.