கமதாபாத்

என் ஜி சி க்கு சொந்தமான எண்ணெய் கிணறு உள்ள கோல்ஃப் மைதானத்தை அரசு விற்க எண்ணுவதாக தகவல்கள் கூறுகின்றன.

மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து நிர்வாக துறை சுருக்கமாக டிபம் என அழைக்கப்படுகிறது.   இந்த துறை சமீபத்தில் பொதுத் துறைகளிடம் உள்ள பயனில்லாத பல சொத்துக்களை விற்கலாம் என தெரிவித்தது.   இவற்றில் பல நிறுவனங்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் விளையாட்டு மைதானங்களும் அடங்கும்.

அந்த வகையில் பாரத் பெட்ரோலியம் வசம் உள்ள விளையாட்டு கழகம் மற்றும் ஓ என் ஜி சி வசம் உள்ள அகமதாபாத் மற்றும் பரோடாவில் உள்ள கோல்ஃப் மைதானங்களும் விற்கப்படலாம் என டிபம் தெரிவித்துள்ளது.   அவ்வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல சொத்துக்கள் அந்தந்த நகரின் மத்தியில் அமைந்துள்ளதால் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல மதிப்புள்ளவைகளாக உள்ளன.

அகமதாபாத் நகரில் உள்ள ஓ என் ஜி சி யின் கோல்ஃப் மைதானம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விளையாட அமைக்கப்பட்டதென சொல்லப்பட்டாலும் அதன் பின்னால் ஒரு தனி கதை உண்டு.   அகமதாபாத் நகரில் எண்ணெய் வளம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்ட பிறகு அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவரகள் வேறு இடங்களுக்கு மாற்றப்ப்பட்டனர்.

ஆயினும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க ஓ என் ஜி சி இந்த கோல்ஃப் மைதானத்தை அமைத்தது.   இந்த கோல்ஃப் மைதானங்களுக்கிடையில் இரு எண்ணெய் கிணறுகள் அமைந்துள்ளன.  அதை சுற்றி இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.   தற்போது ஓ என் ஜி சி யால் பயன்படுத்தப் படாமல் உள்ள இந்த நிலத்தை தனியாருக்கு விற்கலாம் என டிபம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலத்தை தனியாருக்கு ஓ என் ஜி சி விற்று விட்டால் அந்த நிலத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளும் தனியார் வசமாகி விடும்.   சட்டப்படி தனியாருக்கு ஓ என் ஜி சி தனது எண்ணெய் கிணறுகளை விற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.    அதே நேரத்தில் இந்த விற்பனைக்கு நிதி அயோக், எண்ணெய் வள அமைச்சகம் உள்ளிட்ட துறைகள் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.