சென்னை: தமிழகத்தில்  நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்த நிலையில், அதில் சேராமல்,  வீணாக்கிய 20 மாணவர்களுக்கு ஓராண்டு மருத்துவப்படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்டு, எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்களை தேர்வு செய்துவிட்டு, பின்னர்,  கல்லூரியில் சேராவிட்டால் நீட் தேர்வை ஓராண்டு எழுத தடை விதித்தும், மருத்துவப்படிப்பில் சேர ஓராண்டு தடை விதித்தும் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்தள்ளது.

தேசிய அளவு ஒதுக்கீட்டில் ஒரு மாணவர் எம்.பி.பி.எஸ்., இடத்தை தேர்வு செய்து 3வது சுற்றில் மாநில ஒதுக்கீட்டு இடத்தில் சேர்ந்தால் அவர் தேசிய அளவு ஒதுக்கீட்டில் எடுத்த இடம் காலியாகி விடும். பின்னர் நடைபெறும் மாநில ஒதுக்கீட்டில் அந்த இடம் நிரப்பவில்லை என்றால் காலியாகவே இருக்கும்.  சிலர் முதலில் மருத்துவம் படிக்க இடத்தை தேர்வு செய்துவிட்டு, பின்னர் வேறு காரணங்களுக்காக படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டால், அந்த இடங்களில் யாருக்கும் பயனின்றி வீணாக போய்விடுகிறது. இதுபோல கடந்த ஆண்டு  6 எம்.பி.பி.எஸ்., இடங்கள்  மாணவர்கள் சேராததால் காலியாக இருந்துள்ளது.

இந்த நிலையில், நடப்பாண்டில்  தமிழகத்தில் 6 எம்.பி.பி.எஸ்., 28 பி.டி.எஸ்., இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகி உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு முதல், இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடந்து, அதன் பின்னர் எஞ்சிய இடங்களை நிரப்ப இறுதிச்சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. அனைத்துக்கட்ட கலந்தாய்வின் முடிவில், இடம் பெற்ற சிலர் தேர்ந்தெடுத்த கல்லூரிகளில் சேராமல் படிப்பை கைவிட்டுள்ளனர். அதன் எதிரொலியாக சுயநிதி கல்லூரிகளில் மொத்தம் 6 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 28 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

எம்.பி.பி.எஸ்., ஒதுக்கீடு பெற்ற 4 பேரும். பி.டி.எஸ்., ஒதுக்கீடு பெற்ற 16 பேரும் அந்தந்த படிப்புகளில் சேரவில்லை. அகில இந்திய மருத்துவ ஆணையம் அளித்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இனிமேல் அந்த இடங்களை நிரப்ப முடியாது.

ஆகையால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அபராதம், மருத்துவக் கல்வியில் ஓராண்டு சேர அதிரடியாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

முந்தைய சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளில் இருந்து விலகுவதற்கான அபராதத்தை மாணவர்கள் செலுத்தியதால் அவர்கள் அடுத்தாண்டு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

[youtube-feed feed=1]