டில்லி:

இந்தியாவுக்கு 6 நாள் பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்யான்கு வருகை புரிந்துள்ளார். இரு நாடுகள் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.

பின்னர் பெஞ்சமின் நெத்யான்கு பேசுகையில், ‘‘இந்தியா& இஸ்ரேல் உறவு என்பது சொர்கத்தில் நி ச்சயிக்கப்படும் திருமணம் போன்றது. எனினும். ஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா.வில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா எதிராக வாக்களித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனினும் ஒரு எதிர்மறையான ஓட்டு இரு நாட்டு உறவை பாதிக்காது.

எனது வருகை மூலம் இரு நாடுகள் இடையிலான தொழில்நுட்பம், விவசாயம், உலகத்தை மாற்றும் இதர விஷயங்களுடனான உறவு மேலும் வலுப்பெறும். முதலில் மக்களுக்கு இடையே தான் உறவு. பின்னர் தான் தலைவர்கள் இடையிலான உறவு ஏற்படும். மோடி ஒரு சிறந்த தலைவர். மக்களின் எதிர்கால திட்டங்களை கொண்டு வர பொறுமையுடன் செயல்படுகிறார்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘மோடி புரட்சிகரமான தலைவராக உள்ளார். மோடியால் வருங்காலத்தில் புரட்சிகரமான இந்தியா உருவாகும். இஸ்ரேலுக்கு வந்த முதல் இந்திய தலைவர் மோடி. அவரின் வருகையால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளை போல் இல்லாமல் இந்தியாவில் வாழும் யூதர்கள் நிம்மதியாக உள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய நாகரீகம், சகிப்புதன்மை, ஜனநாயகம் ஆகியவற்றின் சிறப்பால் தான் இது சாத்தியப்பட்டது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் பயங்கர தாக்குதல் எப்போதும் எங்கள் நினைவில் உள்ளது. எனவே, இந்தியாவுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளோம்’’ என்றார்.