சென்னை: திமுக கூட்டணியில் வேல்முருகன் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்ட மன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய அரசு அமைக்கும் வகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, கூட்டணி, தொகுதி உடன்பாடு என தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில், தோழமை கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு ஓரளவுக்கு நிறைவுபெற்றுவிட்டன.  ஆனால், அதிமுக கூட்டணியில், தேமுதிக , தமாகா உள்பட சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் திமுக தொகுதி உடன்பாடு குறித்து பேசி வந்தது. இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது, வேல்முருகன் தலைமையிலான குழுவினர் திமுக குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, வேல்முருகன் குறைந்த பட்சம் 2 தொகுதிகள் கேட்ட நிலையில், அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் ” திமுக உடன் இணைந்து தேர்தல் பணியாற்றி இருக்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுவுக்கு ஆதரவு அளித்தோம். அத்துடன் திமுகவுடன் இணைந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தள்ளோம். எத்தனை தொகுதி அறிவித்தாலும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்.இன்று மாலை தொகுதி பங்கீட்டில் கையெழுத்திடவுள்ளேன். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிடும்”. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வரவேண்டும்.

“எதுவும் செய்யாத அதிமுகவுக்கு பாமக ஆதரவளித்துள்ளது. அதை எதிர்த்து பரப்புரை மேற்கொள்வேன்.. இந்த கூட்டணியில் திமுக கூட்டணி வெற்றி பெறும். 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே வன்னியர்களுக்கு கிடைத்து வந்த உரிமையை பறிக்கும் வகையில் தான் உண்டாக்குகிறது. அனைத்து சாதிகளையும் கணக்கெடுத்து அந்தந்த சாதிகளுக்கு ஏற்ற வகையில் சமூக நீதி வழங்க வேண்டும் . அப்போதுதான் வன்னியர் இனமும், பிற இனங்களுக்கு இடியே முரண்பாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க முடியும்.

பாஜக அரசும், அதிமுக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு மக்கள் விரோத திட்டங்களையும், மக்கள் விரோத சட்டங்களையும் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள். இதனால், அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும். பாஜக தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் அரசியல் அதிகாரத்தை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக ஸ்டாலினை முதல்வராக வரவேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்று எங்களுக்கு உரிய இடங்களை ஒதுக்குமாறு திமுக தொகுதி பங்கீடு குழுவிடம் தெரிவித்துள்ளேன். திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் மகிழ்ச்சி உடன் ஏற்றுக்கொள்ள தயார் என தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.