டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மத்தியஅரசு அமைத்துள்ள முன்னாள் குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று தனது  அறிக்கையை மத்தியஅரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பிக்க உள்ளதாக செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.  இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. ஆனால்,   வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இதை அமல்படுத்துவது  சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1983இல் எழுந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதன்பிறகு 1999இல், நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்தது. அப்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

அதன்பிறகு, 2014 மக்களவைத் தேர்தலின்போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த வாக்குறுதியைத் தனது தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்திருந்தது. தற்போது அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் முயற்சிகளை மத்திய பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. அதோடு, இதுதொடர்பான மத்திய அரசு குழுவில் இடம்பெற்றிருந்த மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, குழுவில் இருந்து விலகியுள்ளார்.

இதற்கிடையில், மத்தியஅரசு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவில் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த குழுவினர், பொதுமக்கள் ஆலோசனைகளை கோரியதுடன், அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்று வந்தது.  ஆறு தேசியக் கட்சிகள், 33 மாநிலக் கட்சிகள் மற்றும் 7 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் ஆலோசனைகள் கேட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டு பதில் பெற்றுள்ளன. மேலும்,  இந்தக் குழு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து சட்ட ஆணையத்தின் கருத்தையும் கேட்டுள்ளது. 

அதன் விவரங்களைக் கொண்டு அறிக்கை தயாரித்து வந்தது. தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தனது அறிக்கையை மத்தியஅரசிடம் இன்று தாக்கல் செய்கிறது.