டெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழு முதல் கூட்டம்   செப்டம்பர் 23ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை, மாநில சட்டசபைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக  முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் என்று அக்குழுவின் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார்.

தற்போது, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பண விரையமும், கால விரையமும் ஏற்படுகிறது. இதை குறைக்கும் வகையில், டாளுமன்றம் முதல் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வரை அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று பாஜக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே இதை நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், இடையில் சில மாநில அரசுகள் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தியதால், தனித்தனியாக தேர்தல் நடத்தும் சூழலுக்கு மாறியது. இந்த நிலையில் மீண்டும் ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலையும் நடத்த வேண்டும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது.

பிரதமர் மோடியின் கருத்தை, கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆதரித்தார். 2018-ம் ஆண்டு நாடாளுமன்த்தில் பேசிய ராம்நாத் கோவிந்த், “அடிக்கடி தேர்தல்கள் மனித வளத்தின் மீது பெரும் சுமையை சுமத்துவது மட்டுமல்லாமல், மாதிரி நடத்தை விதிகளை பிரகடனப்படுத்துவதால் வளர்ச்சி செயல்முறையையும் தடுக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, ஒரே நேரத்தில் அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், மேற்கண்ட கமிட்டிகள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதனால், ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. ஆகவே, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வராமலேயே இருந்தது.

இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். தவிர, சிறப்பு அழைப்பாளராக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் உறுப்பினர் பதவியை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில்தான், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று, அக்குழுவின் தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார். ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ராம்நாத் கோவிந்த், செய்தியாளர்களிடம் கூறுகையில் இத்தகவலை தெரிவித்தார். மேலும், இக்கூட்டத்தில், மக்களவை, மாநில சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.