சென்னை:  ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், ர. 50ஆயிரத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்த நிலையில், தற்கொலை கொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து,  கடந்த 2020-ம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அவசர தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதைத்தொடர்ந்து தமிழகஅரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை, சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு ரத்து செய்தது. இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுகஅரசு மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில், ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு  இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால், அவசர சட்டமும் காலாவதியானது.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.70ஆயிரத்தை இழந்த தென்காசி பகுதியில் வசித்த வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்  ஸ்ரீதனா மாஞ்சி தற்கொலை செய்துகொண்டார். இது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னையில் மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னையை அடுத்த  மணலி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் என்பவர்,  ஆன்லைன் ரம்மியில் 50,000 பணத்தை இழந்த  சோகத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மனைவி பெயரில், மகளிர் சுய உதவிக்குழுவில் பெற்ற கடனை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில்  தகவல் தெரியவந்துள்ளது.

ஆன்லைன் ரம்மியால் பலியாகும் உயிர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.