டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தாக்குதல் விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து சபாநாயகரை நோக்கி மையப்பகுதிக்கு ஓட முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தவிர நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து லலித் ஜா என்ற மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமாவத் என்ற நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகேஷ் குமாவத்தை 7 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முதலில் இவர்கள், உடலில் ஃபயர்புரூப் ஜெல்லைப் பூசி நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க திட்டமிட்டதாகவும் பிறகு அதனை கைவிட்டு நாடாளுமன்றத்தில் துண்டு பிரசுரங்களை வீசியெறிய திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இறுதியாக அவர்கள் மக்களவையில் வண்ணப் புகைக் குப்பியை வீசுவது என்று முடிவெடுத்து செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.