டில்லி

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நுழைய அனுமதி அளித்தது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலn வாங்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில், கடந்த 13 ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு நேரமில்லா நேர நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து, இரு இளைஞர்கள் குதித்து, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த புகைக் குப்பிகளை எடுத்து வீசினர். குப்பியிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியே வந்தது. அவர்களில் ஒருவர், உறுப்பினர்கள் இருக்கைகளில் தாவிக் குதித்து ஓடினார்.

அவர்கள் இருவரும் சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம், ஜெய்பீம், ஜெய் பாரத் என்று உரத்த குரலில் கோஷங்கள் எழுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினர்களும், பாதுகாப்புப் படையினரும் பிடித்தனர்., அதே வேளையில்  வெளியேனும் ஒரு 42 வயது பெண்ணும், 25 வயது ஆணும் புகைக் குப்பிகளை வீசி கோஷங்கள் எழுப்பினர்.

அவர்கள் 4 பேர் மீதும் தீவிரவாத தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவரிடம் இருந்த நுழைவுக்கான அனுமதிச் சீட்டில் சாகர் சர்மா என அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர். பிரதாப் சிம்ஹா அவருக்கு அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலம் பெற டில்லி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதாவது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர். பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது தனி உதவியாளரிடம் விசாரணை நடத்தச் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.