நாடாளுமன்ற மக்களவையில் புதனன்று நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

லலித் ஜாவை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு போலீசார் லலித் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரும் மக்களவை பாதுகாப்பை மீறியதன் பின்னணியில் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சி செய்ததாக ரிமாண்ட் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

எம்.பி.க்களை பயமுறுத்துவதும் அவர்களின் நோக்கமாக இருந்தது விசாரணையின் போது தெரியவந்ததாக ரிமாண்ட் குறிப்பில் போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சதித்திட்டம் தீட்டுவதற்காக பலமுறை சந்தித்துப் பேசியதாக லலித் ஜா கூறியதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எதிரி நாடுகளுடனும் பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு வைத்திருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும். குற்றம் சாட்டப்பட்ட லலித் ஜா நாட்டில் அமைதியின்மையை உருவாக்க நினைத்ததாக கூறியதாக டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட லலித் ஜாவை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.