விருதுநகர்: தமிழ்நாட்டில் புதுக்கோட்டை வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,. அதுபோல மேலும் ஒரு சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இங்கு மர்ம நபர்கள் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலத்தை வீசியுள்ளது தெரிய வந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதுக்கோட்டை எனும் கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கிறது. அங்குள்ள நீர்தேக்க தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்யப்படுவது வழக்கம். சுத்தம் செய்வதற்காக, இரு நாட்கள் தண்ணீர் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டு, சுத்தப்படுத்தும் பணி நடைபெறும்.
அதுபோல தற்போதும், குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் நோக்கில், தண்ணீர் காலியாக வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டு நாட்கள் கழித்து அந்த தொட்டி மாநகராட்சி ஊழியர்களால் சுத்தம் செய்ய அங்கு சென்றனர். அப்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இதுதொடர்பாக அதிகாரிகளிம் தெரிவித்தனர். அவர்கள் உடனே காவல்துறையில் புகார் அளித்தனர். அதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், நீர்த்தேக்க தொட்டியில் பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் நாயின் சடலம் கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த நாயின் சடலம் மீட்கப்பட்டு, உடல்கூறாய்வு சோதனை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதுடன், இந்த செயலை செய்தவர்கள் யார் என்பது குறித்து, அந்த கிராம மக்கள் மற்றும் அருகே உள்ள மற்ற கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உடனே மாநகராட்சி ஊழியர்களால் அந்த குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. மேலும், அந்த பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சமீபத்தில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் எனும் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாக , அடுத்த ஒரு நிகழ்வு தற்போது மீண்டும் தமிழகத்தில் நிழழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.