சேலம்: ‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின்கீழ் சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

மியாவாக்கி பாரஸ்ட் எனப்படும் (Miyawaki Forest) “நகருக்குள் வனம்”  திட்டம் ஏற்கனவே சென்னை, கோவை உள்பட பல மாநகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல சேலத்திலும் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வந்தது.

சேலம் மாநகராட்சிப் பகுதியை பசுமை படுத்தும் வகையிலும், சுற்றுப்புறச் சூழலை பேணி பாதுகாத்திடும் வகையிலும், நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையிலும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளது. அதற்காக சேலம் அருகே உள்ள சூரமங்கலம் மண்டலத்துக்கு உட்பட்ட என்.டி.எஸ். நகரில் 21 ஆயிரம் சதுரடி பரப்பிலும், அபிராமி கார்டனில் 9 ஆயிரம் சதுரடி பரப்பிலும், அரியாகவுண்டன்பட்டியில் 22 ஆயிரம் சதுரடி பரப்பிலும், போடிநாயக்கன்பட்டியில் 10 ஆயிரம் சதுரஅடி பரப்பிலும் நகருக்குள் வனம் அமைப்பதற்கான இடம் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு சமன் படுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  சேலம் மாவட்டத்தில் ‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின்கீழ்  மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஒரு லட்சம் மரக்கன்றுகள் சேலம் மாநகரக்குள் நட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும்,  மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள பாசனமற்ற ஏரிகளை தூர்வாரி  பாசனப்பகுதிகளுக்கு மழைநீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்படும் என்றும் கூறினார்.

ஏற்கனவே, கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அவரது நினைவாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தலமரக்கன்று கள் நடும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் ஒரு லட்சம் தலமரக் கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்ட நடைபெறு வருவது குறிப்பிடத்தக்கது.