ஜி-20 மாநாட்டு இலச்சினையில் சமஸ்கிருதச் சொல்லான வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐ.நா. சபையில் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருதம் போன்ற மொழியை ஜி-20 மாநாட்டில் பயன்படுத்த சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.

இதனையடுத்து “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற தொடரின் ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டுமே அனைத்து ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளதுடன் G-20 லோகோவில் இடம்பெற்றுள்ள சமஸ்கிருதச் சொல் பயன்பாட்டை ஆதரிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளது.

ஜி-20 மாநாட்டின் அதிகாரபூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்கும் என்று இதற்கு முன் நடைபெற்ற அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்தது.

இருந்தபோதும் இந்தியா தலைமைதாங்கும் ஜி-20 லெட்டர்ஹெட்டில் வசுதைவ குடும்பகம் என்ற “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” தொடரின் தேவநாகிரி மற்றும் ஆங்கில சொல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதற்கு சீனா மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும், உக்ரைன் தொடர்பாக ஜி -20 உரையில் உள்ள மொழியை தொடர்ந்து எதிர்க்கும் ரஷ்யா கூட, அது குறித்த சீன நிலைப்பாட்டில் சேரவில்லை என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

கடந்த சில வாரங்களாக ஜி-20 மாநாட்டிற்காக இந்தியா அறிமுகப்படுத்திய பல சொற்றொடர்களில் சமஸ்கிருதம் இடம்பெற்றுள்ளதற்கு சீன பிரதிநிதிகள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை” மற்றும் “பாலினம் உள்ளடக்கிய வளர்ச்சி” ஆகியவை குறித்த வாசகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிக்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.