சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதாக சத்துணவு பணியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.6,750 காலமுறை ஊதியமாக வழங்குவதுடன், அகவிலைப்படியும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி வரும் 7ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் தெய்வசிகாமணி, ரெங்கநாதன், அயோத்தி, சீனிவாசன், ஞானஜோதி, ஆதிலட்சுமி, போஸ், ராஜ்குமார், அங்காளஈஸ்வரி, மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்புகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் அரசு ஊழியர்களுக்கு உறுதியளித்த ஓய்வூதியத் திட்டம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிப்படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் முறையான ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
அதனை நிறைவேற்றும் வகையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.6,750 காலமுறை ஊதியமாக வழங்குவதுடன், அகவிலைப்படியும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்று, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் சமச்சீர் அடிப்படையில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றத் தவறினால், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடும் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதுடன், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வருகிற 30-ந் தேதி சென்னையில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக முறையிடுவதும், அந்தப் போராட்டங்களில் சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் திரளாக கலந்து கொள்வதும் என பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து, தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]