சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பிபிஇ உடையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், வாக்கு சேரிக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கூடுவதால், கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், பொதுமக்கள் முக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பணியின்போது, கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலான கொரோனா பாதுகாப்பு உடையான பிபிஇ உடை அணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதை கண்ட தேர்தல் அலுவலர்கள், அவரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.