ராம நவமி தினத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி திலகம் போல் ஏற்பட்டது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பின் வரும் முதல் ராம நவமி என்பதால் உ.பி. மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சித்திரை மாதம் வளர்பிறை நவமி அன்று கொண்டாடப்படும் ராம நவமி நிகழ்ச்சிக்காக அயோத்தி ராமர் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி 58 மி.மீ. அளவிலான சிறிய வட்ட வடிவில் திலகம் போன்று விழுந்தது. உச்சி வெயில் நேரத்தில் பிற்பகல் 12:04 மணிக்கு ஏற்பட்ட இந்த அதிசய நிகழ்வு சுமார் நான்கு நிமிட நேரம் நீடித்தது.

19 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அதே இடத்தில் அதே நேரத்தில் சூரிய ஒளி விழும் நிலையில் ஒவ்வொரு ராம நவமியின் போதும் நண்பகல் 12 மணி அளவில் அயோத்தி ராமர் சிலை மீது சூரிய திலகம் ஏற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய வானியற்பியல் கழகம் (Indian Institute of Astrophysics – IIA, Bangalore) மற்றும் ரூர்கி CSIR-CBRI ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு ராம நவமி அன்றும் கிழக்கு நோக்கி இருக்கும் ராமர் சிலை மீது உச்சிகால பூஜையின் போது சூரிய ஒளி விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இதை வடிவமைத்தவர்களில் ஒருவரான டாக்டர் எஸ்.கே. பணிகிரஹி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ராம நவமி வந்த நிலையில் அடுத்த ஆண்டு ராம நவமி தினத்திலும் இதேபோன்று சூரிய திலகம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.