சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. மீறினால் பேருந்து பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட்டை தமிழ்நாடு பதிவெண்ணுக்கு மாறும் வகையில் 3 மாதம் பர்மிட்டை நீட்டித்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், வெளிமாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் அடங்கும். வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது. அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது என கடந்த 12-ம் தேதி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கால அவகாசம் வேண்டி கோரிக்கை வைத்தனர். அதன்படி, தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயங்க இன்று வரை (18ந்தேதி காலை) வரை கால அவகாசம் விடுக்கப்பட்டது. அதன்படி காலக்கெடு இன்று (ஜூன் 18) காலையுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, வெளி மாநில பதிவெண்ணுடன் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ஆம்னி பேருந்துகள் தமிழ்நாடு பதிவென் மாற்ற போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பதிவெண்ணாக மாற்றாமல் இயக்கினால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு கீழ் இயங்கும் சுற்றுலா வாகனம் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும் என்றும் அதில் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர்கள் சுற்றுலா பயணிகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளத.
மேலும், குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கான பயண விவரங்கள் மற்றும் இந்திய பதிவுகள் அதிகார வரம்பிற்குட்பட்ட போக்குவரத்து அதிகாரம் வேறு ஏதேனும் சட்ட அமலாக்க அதிகாரிக்கு தேவைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மோட்டார் வாகனத்துறை மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் சிறப்பு சோதனை இடங்களிலும் மீதமுள்ள இடங்களில் காவல் சோதனை சாவடிகளில் சுற்றுலாப் பயணிகளின் விவரங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணத்திட்ட விவரங்கள் மற்றும் சுற்றுலா முடிவுறும் போது வெளியேறும் வழி ஆகிய விபரங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
எனவே, இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு உள்ளாகவே விதிகளை மீறி இயக்கப்படுவதை தடுக்கவும், இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை கருத்தில் கொண்டும், விபத்துகள் நிகழும் போது காப்பீடு பெறுவதில் பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டும் இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகம் சார்பில் இவ்வகை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கடந்த நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்டங்களில் கூட்டங்கள் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்வதற்கான காலக்கெடு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால் மொத்தமுள்ள 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே இதுவரை தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து TN என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழ்நாட்டிற்குள் இயங்குவதற்கு அனுமதி சீட்டும் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.