சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீறி இயக்கினால்  பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து,  தமிழ்நாட்டில் உள்ள 547 வெளிமாநில பதிவெண் கொண்ட  ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில்,  அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு (ஏஐடிபி) பெற்று இயங்கும் பல ஆம்னி பேருந்துகள், சுற்றுலா பேருந்துபோல இல்லாமல், வழக்கமான பயணியர் பேருந்துபோல் செயல்படுகின்றன. குறிப்பாக  சென்னையில் இருந்து ப ல்வேறு மாவட்டங்களுக்கு பயணிகளை நாளை தோறும் ஏற்றிக்கொண்டு செல்கிறது. எனவே வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, ‘ஏஐடிபி’ பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்ய போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. இதற்காக 3 முறை அவகாசம் வழங்கியது. இதில் 652 பேருந்துகளில் 547 பேருந்துகள் தமிழக பதிவெண் அதாவது ‘டிஎன்’ எனும் வாகன பதிவெண் பெறவில்லை. 100 பேருந்துகள் மட்டுமே பதிவெண்ணை மாற்றியது.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான காலக்கெடு இன்று (ஜூன் 18) காலையுடன் முடிவடைந்தது. வெளி மாநில பதிவெண்ணுடன் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கோயம்பேட்டில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு மாற்று வழி என்ன என்பதை கலந்தாலோசித்த பிறகு பேருந்துக்களை இயக்குவது என முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியூர்களுக்கு பயணம் செய்ய ஏற்கனவே முன் பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கினால் பறிமுதல்! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை