சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை  என நடிகர் விஜயின் தவெக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்பட தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் எந்தத் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடாது என நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டிவிகே எந்த கட்சிக்கும் ஆதரவளிக்காது என நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பா.ம.க மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில், மருத்துவர் அபிநயா போட்டியிடுகிறார். ஆனால், மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி உள்ளது. அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை  என நடிகர் விஜயின் தவெக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.