ஜெனிவா: இந்தியா உள்பட 57 நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்தஆண்டு (2021) செப்டம்பர் மாதம் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா பிஏ2 வைரஸ் எனப்படும் ஒமிக்ரான இதுவரை 57 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய உலக சுகாதார மையத்தின் கொரோனா பிரிவு தலைவர் மரியா வான், ”ஒமிக்ரான் உலக அளவில் அதிகமாக பரவி வருகிறது. இப்போது பாதிப்பு அளவு குறைவாக இருந்தாலும், போகப்போக அதன் தாக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தனி மனித இடைவெளி, மாஸ்க், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒமிக்ரான் வைரஸ் பிஏ1, பிஏ 1.1, பிஏ2 மற்றும் பிஏ3 எனவும் உருமாற்றம் அடைந்துள்ளதாகவும், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள ஒமிக்ரான் வைரசில் 96 சதவீத வைரஸ்கள் பிஏ1 மற்றும் பிஏ 1.1 ஆகிய உருமாற்ற வகைகள்தான் என்றும், தற்போது 57 நாடுகளில் பிஏ2 வகை ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, இந்த வைரஸ் ஆபத்தானதாக இருக்ககூடும் என்று அஞ்சப்படு கிறது. எதிர்காலத்தில் இந்த வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை உருவாகலாம். அதனால் தடுப்பூசி எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், தடுப்பூசி செலுத்தியவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த புதிய வகை அதிகம் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.