மாஸ்கோ

க்ரைனைக் கருவியாகப் பயன்படுத்தி ரஷ்யாவை கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் கூறி உள்ளார்.

கடந்த ஒரு மாதமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் ஆன விவகாரம் கடுமையாகச் சூடு பிடித்துக் காணப் படுகிறது.   ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டு எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்த அமெரிக்கா உக்ரைன் நாட்டுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இது குறித்து மாஸ்கோ நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,

“அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளிடம் நாம் உக்ரைனை மேற்கத்திய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு அவர்கள் அளித்த பதில் எவ்விதத்திலும் திருப்திகரமாக இல்லை. தொடர்ந்து ரஷ்யாவின் அடிப்படை கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவது அப்பட்டமாக தெரிகின்றது.

உக்ரைனின் பாதுகாப்பில் கவலை கொள்வதாக அமெரிக்கா கூறுகிறது.  உண்மையில் அது உக்ரைனை ரஷ்யாவைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாகப் பார்க்கிறது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ரஷ்யாவின் பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அனைத்துக் கோரிக்கைகளையும் பரிசீலித்தால் பிரச்சினைக்கு இப்போதே முடிவு வரும்.  ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை.என்றாலும் நாம் அதைச் செய்வோம்”

எனத் தெரிவித்துள்ளார்.