ஜெனிவா: ஒமிக்ரான் தொற்றால் உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது. இது மருத்துவ உள்கட்டமைப்பு களை சிதைத்து வருகிறது என்றும் அச்சம் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், அர்ஜென்டினா பிரேசில் மற்றும் பல நாடுகளில் டெல்டா திரிபு மற்றும் ஒமிக்ரான் திரிபு ஆகிய இரண்டும் சேர்ந்து பாதிப்புகளை அதிகப்படுத்திவ ருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், அதை கண்டுகொள்ளாமல்,  வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருவதும் தொடர்கிறது. அதே வேளையில், தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதால் உயிரிழப்புகள்  குறைந்துள்ளன.

தற்போதைய நிலையில்,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஆக அதிகரித்து உள்ளது.  இவர்களில்  5 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரத்து 981 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 72 ஆயிரத்து 631 பேர் உயிரிழந்துள்ளனர். ஒமிக்ரான் தொற்றும் தீவிரமடைந்து வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒமிக்ரான் பிறழ்வு வைரஸ் காரணமாக  உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்து உள்ளது.  ஒமிக்ரான் தொற்று மருத்துவ கட்டமைப்புகளை சிதைத்து வருகிறது என்றும்,  ஒமிக்ரான் திரிபினால் உலக அளவில் ஏற்பட சாத்தியமுள்ள இடர்ப்பாடு ‘மிக அதிகம்’ என்றும், இதனால், சில பகுதிகளில் தீவிர விளைவுகள் ஏற்படலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தொற்றின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தரமான முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்தில் கொரோனாவுடன் வாழ நாம் அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 8,961 ஆக உயர்வு…