சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் ஒமிக்ரான் பரவலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக மேலும் 890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 307 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல, தமிழ்நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு 44ஆக தொடரும் நிலையில், சென்னையில் மட்டும் 32 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் 1,088 ஆக இருந்த கொரோனா பாதிப்பு டிசம்பர் 4-வது வாரத்தில் 1,720 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் காரணமாக, சென்னையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்தியஅரசு, தமிழகஅரசை வலியுறுத்தி உள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா? ஊரடங்கு அறிவிக்கப்ட வேண்டுமா மற்றும் பள்ளிகளை தொடர்ந்து நடத்தலாமா அல்லது ஆன்லைன் வகுப்புகளை தொடரலாமா என்பது குறித்து, இன்று காலை 11 மணி அளவில் தலைமைச்செயலகத்தில் மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.