ஸ்ரீநகர்

ஜாமினில் வெளிவந்துள்ள சாத்வி தேர்தலில் போட்டியிடுவது பிரக்ஞா குறித்து தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று முன் தினம் பாஜக போபால் தொகுதியில் சாத்வி பிரக்ஞா தாகுரை வேட்பாளராக அறிவித்தது. சாத்வி கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு எட்டு வருடங்கள் சிறையில் இருந்தவர். தற்போது அவர் ஜாமீனில் வந்துள்ளார். அவர் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் நேற்று ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் வாக்குப் பதிவு நடந்தது. இந்த தொகுதியில்  தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா போட்டியிடுகிறார், அவருக்கு வாக்களித்த காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவரும் ஃபரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது உமர் அப்துல்லா, “மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் உடல்நிலை சரியில்லாததால் சாத்வி பிரக்ஞா தாகுர் ஜாமினில் வந்துள்ளார். அவர் தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உடல் வலு உள்ள சாத்வி பிரக்ஞா சிறையிலேயே இருந்திருக்கலாமே. விரைவில் இந்த அடிப்படையில் நீதிமன்றம் அவருடைய ஜாமீனை ரத்து செய்து அவரை மீண்டும் சிறையில் அடைக்கும் என எதிர்பர்க்கிறேன்.” என தெரிவித்தார்.