டில்லி:

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (17ந்தேதி) தொடங்கி உள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாஜக எம்.பி.யான ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுகிறார்.

உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதிக்கு இணையான அரசியல் சாசன அதிகாரம் கொண்ட மக்களவை சபாநாயகர் பதவிக்கு  ராஜஸ்தான்  மாநிலத்தில் கோட்டா தொகுதியில் இருந்து பாஜக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் 17வது  மக்களவையின் புதிய சபாநாயகராக இன்று பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை கூட்டம் நேற்று தொடங்கியதும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு இன்று முற்பகலும் முடிவடையும் நிலையில், இன்று பிற்பகல்  சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது.

இதையடுத்து பாஜக தலைமை சபாநாயகராக பாஜக எம்.பி ஓம் பிர்லாவை நியமிக்க முடிவு செய்துள்ளது. அவருக்கும், சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இன்றுஅவர் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு ராஜஸ்தான் பாஜக எம்.பி ஓம் பிர்லா பெயரை, பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிய  இருப்பதாகவும்,  இதையடுத்து, சபாநாயகர் பொறுப்பேற்க தனக்கு சம்மதம் என்று, ஓம் பிர்லா எழுதிக் கொடுப்பார்.

1962ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்த ஓம் பிர்லா, கோட்டா தெற்கு தொகுதியிலிருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த லோக்சபா தேர்தலில் கோட்டா-புன்டி தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக பதவி வகித்தார். இப்போது தொடர்ந்து 2வது முறையாக எம்பியாகியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில்  ராஜஸ்தானின் கோட்டா-புன்டி லோக்சபா தொகுதி யில், காங்கிரசின் ராம்நாராயணன் மீனாவை 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தவர் ஓம் பிர்லா.

அரசியல் வணிகவியலில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த ஓம் பிர்லா, மாணவர் பருவத்திலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 1979ம் ஆண்டு, மாணவர் சங்க தேர்தலில் வென்று தலைவராக பதவி வகித்தார். பாஜகவில் அரசியல் பயணத்தை துவங்கிய ஓம் பிர்லா, அக்கட்சியின், ராஜஸ்தான் மாநில இளைஞர் பிரிவு தலைவராக பதவி வகித்தவர். பிறகு தேசிய அளவில், துணைத் தலைவராக உயர்ந்தார்.

குடும்பம் ஓம் பிர்லாவின் மனைவி பெயர் டாக்டர். அமிதா பிர்லா. 1991ல் திருமணமானது. அகன்க்ஷா மற்றும் அஞ்சலி ஆகிய 2 பெண் குழந்தைகள் இத்தம்பதிக்கு உள்ளனர். அகன்க்ஷா சார்டர்ட் அக்கவுண்டன்ட் பதவியிலும், அஞ்சலி அரசியல் அறிவியல் பிரிவில், பட்டமும் பெற்றவர்கள்.

ஓம்பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அவரது மமைனவி அமிதா பிர்லா தெரிவித்து உள்ளார்.