மும்பை

மும்பை வர்சோவா கடற்கரையில் 20 ஆண்டுகளுக்குப் பின் அரிய வகை ஆமைகளான சிற்றாமைகள் தென்பட்டுள்ளன

ஆமைகளில் ஒருவகை சிற்றாமை ஆகும்.  இவ்வகை ஆமைகள் அரபிக் கடலில் அதிகம் உள்ளன.   கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மும்பைக் கடற்கரையில் இந்த ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்லும்.   அதன் பிறகு ஆமைக் குஞ்சுகள் மெதுவாக சென்று கடலில் சேரும்.    ஆனால் 20 வருடங்களாக இந்த ஆமைகள் மும்பை கடற்கரையில் தென்படுவது இல்லை.

இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள வர்சோவா கடற்கரையில் நடைபயிற்சி செய்பவர்கள் இந்த சிற்றாமைக் குஞ்சுகளை கண்டுள்ளனர்.   உடனடியாக தன்னார்வு தொண்டர்களிடம் தெரிவித்துள்ளனர்.   அந்த தொண்டர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வர்சோவா கடற்கரை சுத்திகரிப்பு குழுவினரின் தலைவர் அஃப்ரோஸ் ஷா அங்கு வந்து அந்த ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் செல்வதைக் கண்டுள்ளார்.

அவர், “சில தினங்களுக்கு முன்பு ஒரு சில சிற்றாமைகள் கடற்கரைக்கு வந்து சென்றதாக சிலர் கூறினார்கள்.   கடந்த 20 வருடங்களாக இந்த ஆமைகளின் வரத்து நின்று போனதால் யாரும் அதை நம்பவில்லை.   தற்போது அந்த ஆமைகள் முட்டையிட கரைக்கு வந்துள்ளதும்  முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வந்தபின் அந்த குஞ்சுகள் கடலுக்கு திரும்பியதும் தற்போது தெரிய வந்துள்ளது.”  எனத் தெரிவித்தார்.

கடல் வாழ் உயிரின நிபுணர் வினய் தேஷ்முக், “சிற்றாமைகள் கடற்கரை மாசுபட்டிருந்ததால் இங்கு வருவதை நிறுத்தி இருக்கலாம்.  தற்போது கடற்கரை சுத்திகரிப்பு குழுவினர்  கடற்கரையை சுத்தமாக வைத்துள்ளனர்.   அதனால் கடல் நீரிலும் மாசு குறைந்துள்ளது.   அதனால் தற்போது சிற்றாமைகள் முட்டையிட இந்த கடற்கரைக்கு வந்துள்ள என தோன்றுகிறது”  எனக் கூறி உள்ளார்.