ஆஸ்திரேலியாவில் கால் டாக்சி சேவையை தொடங்குகிறது ‘ஓலா’

டில்லி:

ஆஸ்திரேலியாவில் கால் டாக்சி சேவையை தொடங்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய நிறுவனமான ஓலா இரண்டாவது முறையாக ஒரு வெளிநாட்டில் தனது சேவையை தொடங்கவுள்ளது. வெளிநாடுளில் கால் டாக்சி சேவையில் கொடி கட்டி பறக்கும் உபேர் நிறுவனத்தை எதிர்த்து ஓலா தனது போட்டியை ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

அடுத்த ஒரு சில மாதங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய நகரங்களில் ஓலா சேவை தொடங்கப்படுகிறது. அங்கு தனியார் வாகன உரிமையாளர்கள், கூட்டாண்மை டிரைவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இது குறித்து ஓலா நிறுவனர் பாவிஸ் அகர்வால் கூறுகையில், ‘‘ஆஸ்திரேலியாவில் சேவை தொடங்குவது உற்சாகமாக இருக்கிறது. அங்கு கால் டாக்சி சந்தை அதிக வளத்துடன் இருக்கிறது. கூட்டாண்மை டிரைவர்களை நியமனம் செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆரோக்கியமான ஒருங்கிணைப்பு சுற்றுசூழல் முறையை ஆஸ்திரேலியாவில் கொண்டு வருவதில் முனைப்பாக உள்ளோம்’’ என்றார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது உபேர், கோகேட்ச் ஆகிய இரு நிறுவனங்கள் கால் டாக்சி சேவையை வழங்கி வருகிறது. கோகேட்ச் நிறுவனம் ஆஸ்திரேலியா பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல்லின் மகன் அலெ க்ஸ் பின்னணியில் இயங்கி வருகிறது.

ஏற்கனவே ஓலா பங்களாதேஷில் கடந்த ஆண்டு சேவையை தொடங்கியுள்ளது. தற்போது இரண்டாவது வெளிநாடாக ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் 2011ம் ஆண்டு ஓலா தனது சேவையை தொடங்கியது. 1.25 கோடி வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 10 லட்சம் டிரைவர்கள் மூலம் 110 நகரங்களில் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓலாவின் முதலீட்டாளரான ஜப்பானின் காங்லோமேரேட் சாப்ட் பேங்க் குழுமம் சுமார் நூறு கோடி டாலராக முதலீட்டை அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து ஓலா தனது விஸ்தரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ola plan to begin call taxi services in Australia, ஆஸ்திரேலியாவில் கால் டாக்சி சேவையை தொடங்குகிறது ‘ஓலா’
-=-