2019-2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது.

இதுவரை பதிவான வாக்குகள் எண்ணாமல் இருக்கும் நிலையில், வரும் 15 ஆம் தேதி, வாக்குகள் எண்ணுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது .

விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர் .

தேர்தலுக்கு தடை கோரியும், தேர்தலை ரத்து செய்ய கோரியும் மனுத்தாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமீன் வழக்கு இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது.

இதற்கு நடிகர் சங்க தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்,வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமீன் தரப்பினருக்கு அவகாசம் வழங்கும் வகையில் வழக்கை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி கல்யாண சுந்தரம், அன்று அவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைத்தாலும், இல்லாவிட்டாலும், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் தெரிவித்தார்.