சென்னை: ஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க முயற்சிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சிலை அமைக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஜூன் 3ந்தேதி மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநதி பிறந்தநாளையொட்டி அவருக்கு, திருவண்ணாமலையில் சிலை வைக்க மாவட்ட திமுக முயற்சித்து வருகிறது. அவர்கள் வைக்க உள்ள இடம், ஆக்கிரமிப்பு நிலம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், கருணாநிதி சிலை வைக்கப்பட உள்ள இடம், வேங்கைக்கால் பகுதியில் 1992ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சிலையை நிறுவுவதற்காக பில்லர்கள அமைக்கப்பட்டு, அவசர அவசரமாக பணிகள் நடைபெற்று அதை தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிலை வைக்கப்படும் இடமானது, கால்வாய் அமைந்துள்ள பகுதி என்றும், அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் பருவமழை காலங்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடம் என்றும், இதனால் கிரிவலத்தின் போது பிரச்சினை ஏற்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் பாதிக்க கூடும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் நில உரிமையாளர் என கூறும் அமைச்சர் எ.வ.வேலு தரப்பில், ராஜேந்திரன் என்பவரிடமிருந்து வாங்கிய நிலத்திற்கு பட்டா உள்ளது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிறரின் தூண்டுதலின் பேரில் தொடரபட்ட வழக்கு என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, கருணாநிதி சிலை சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.