செங்கல்பட்டு: ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், அதற்கு துணைபோன அரசு அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. ‘ஆட்சிகள் மாறினாலும் அலுவலர்கள் மாறவில்லை என்று கூறிய நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அனுமதித்த அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என பொறுப்பு தலைமை நீதிபதி காட்டமாக கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியில் ‘கீழ் மருவத்தூர்’ ஏரி இருந்து வந்தது. இதை மேல்மருவத்தூர் சித்தர் பீடம் 2015ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இநத் வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, இன்றைய விசாரணையின்போது, மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு தொடர்பான அறிக்கையை வழங்கியது. மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் உள்ள அரசு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு அலுவலகங்கள், ரயில் பாதைகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏரியின் ஒரு பகுதியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமித்து கட்டடங்கள் எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆட்சிகள் மாறினாலும் அலுவலர்கள் மாறவில்லை என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அனுமதித்த அரசு அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே 2018ஆம் ஆண்டு அப்போதைய அரசு, நிலை அறிக்கை தாக்கல் செய்திருந்தாலும், தற்போது எடுக்க உள்ள நடவடிக்கை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து வழக்கைத் தள்ளிவைத்தனர்.