சென்னை: தமிழகத்தில் ஓபிசி சான்றிதழ் வழங்கும்போது, வேளாண் வருமானத்தை கணக்கில் எடுக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிரிப்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு 1993ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பிலும், 2007ஆம் ஆண்டு முதல் ஐஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் அதற்கான ஜாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு பணியில் அல்லது கல்வி நிறுவனத்தில் சேர வளமான பிரிவினரை (Creamy layer) நீக்கி, ஓபிசி சான்றிதழ் எனப்படும் இதர பிற்படுத்துவோர் சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக அவர்கள் ஓபிசி சான்றிதழ் பெற்று மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து வருகின்றனர். இந்த சான்றிதழ் வட்டார அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு புதிய ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓபிசி சான்றிதழ் வழங்கும் போது வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறையை அரசு வெளியிட்டுள்ளது. வருமான வரம்பை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டு ஆணை வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஒபிசி சான்றிதழ் பெற 1993 ஆம் ஆண்டு அறிவிப்பின் படி பெற்றோர்களின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு ரூ.8 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு அவை தற்போது வரை நடைமுறையில் உள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.