சென்னை:

15வது நிதி ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஏற்பாடு செய்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழத்தில் நிதித்துறையை கைவசம் வைத்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

15வது நிதி ஆணையத்தில் 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக 2011ம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப்படையாக கொள்ள வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டள்ளது. நிதி ஆணையத்தின் இந்த முடிவக்கு தென் மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக மக்கள் தொகையை இந்த மாநிலங்கள் நிலைநிறுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன. நிதி ஆணையத்தின் புதிய மாற்றம் காரணமாக தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாதிப்பு ஏற்படும்.

மத்திய அரசுடன் சுமூக உறவை கடைபிடிக்கும் நோக்கத்துடன் செயல்படும் தமிழக அரசு கேரளாவில் நடக்கும் கூட்டத்தை புறக்கணித்துள்ளது.