ஓ. பன்னீர் செல்வம் – ஆட்டம் ஆரம்பம்!

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்..

பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்ததை போன்றே தமிழக தேர்தலுக்கு பின்னான அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எப்போதும் மௌன மொழி பேசும் பன்னீர் செல்வம் அவர்கள், சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது அரசியல் இலக்கை தெளிவு படுத்தியுள்ளார். இலக்கு, கட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவருவதேயாகும்.

அதிமுக முதல்வர் தேர்வின்போதே, நீண்ட சிந்தனைக்கு பின் வெல்ல போகாத  அணியின்  முதல்வர் போட்டியில் தனது வளங்களை வீணடிக்காமல், தேர்தலுக்கு பின்னான  களத்திற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டார்.  அதன் பொருட்டே, ஒரு சிறிய போராட்டத்திற்கு பின் அதிமுக வழிகாட்டுதல் குழு கண்டு தாம் திருப்தி கண்டதாக ஒரு பிம்பத்தை காட்டி, போட்டியில் இருந்து ஒதுங்கி கொண்டார். பழனிச்சாமி அவர்களையே முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்தார்.

கட்சியில் இருந்த அனைவரிடமும் தாம் ஒரு தியாகச்செம்மல் போன்றதொரு பிம்பத்தை உருவாக்கியுள்ளார். இதே பிம்பத்தோடு,  தான் ஒரு பரதன் என்ற விளமபரம் மூலம், தன் கட்சியைவிட்டு வெளியில் உள்ள சசிகலா மற்றும் தினகரன் அவர்களின் நன்மதிப்பை பெறவும், தன்னை ஒதுக்கி அவர்கள் எத்தகைய தவறை செய்தார்கள் என்ற செய்தியை அனுப்பினார்.

அது அவர் எதிர்பார்த்ததை போன்றே விளைவுகளை ஏற்படுத்தியது. தற்பாது, நண்பர் பன்னீர் செல்வமானார், எதிரணி தினகரனுக்கு.  சசிகலா மற்றும் தினகரனின் கோவத்தை முழுவதுமாக பழனிச்சாமி மீது, லாவகமாக திருப்பினார். தேர்தல் களம் தான் எதிர்பார்த்ததை போன்றே, அதிமுகவிற்கு வெற்றியை தேடித்தரப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்.

இப்பொது, துணிச்சலாக அடுத்த அரசியல் நகர்வை துவங்கிவிட்டார். இது புது பன்னீர் செல்வம், பழைய பன்னீர் செல்வம் அல்ல . அவர் முன்னர் செய்த பல தவறுகளுக்கான பாடங்களை பழனிச்சாமியிடம் கற்றுவிட்டார். ஆகவே, கள நாயகனாகவே ஆட்டத்தை தொடங்குவார்.

அவருடைய தற்போதைய இலக்கு, தனது சட்டமன்ற தொகுதியை வெல்லவேண்டும். அவர் எந்த விலை கொடுத்தும் அதை சாதிப்பார். ஐம்பதுக்கும் குறைவான தொகுதிகளை அதிமுக வென்றால், பாரதிய ஜனதா கட்சி தனது கணக்கை அவர்களிடம் இருந்து தொடங்குவார்கள். ஆகவே,தேர்தலுக்கு பின்னாக பாரதிய ஜனதா கட்சி வெல்லாமலும் சட்டசபை செல்வார்கள். அந்த நகர்வு, பன்னீரின் வேலையை இலகுவாக்கும். மாறாக, இருபதுக்கும் குறைவான தொகுதிகளை அதிமுக வென்றால், ஆட்டம் ஆரம்பிக்காமலே, பழனிச்சாமி தோற்கவேண்டி வரும்.

பழனிச்சாமியும், தேர்தல் களம் கைமீறி போவதை அறிந்தவராக தனது வளங்களை தேர்தலுக்கு பின்னான கட்சியை தக்க வைப்பதற்கான களத்திற்காக சேமிப்பார். அடுத்துவரும் நாட்களில், இது அதிமுக தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். பழனிச்சாமி அரசியல் சாதுர்யம் மிக்கவர் என்பதை கடந்த நன்கு ஆண்டுகளில் நிரூபித்துள்ளார். ஆனால், அதிகாரம் அற்ற பழனிச்சாமியின் அரசியல் சாதுர்யத்தை களம் சோதிக்கும். புதிய பன்னீருக்கு அவர் ஈடுகொடுப்பாரா ? என்பது மிக பெரிய சவால்.

பதுங்கிய சசிகலா, அதிமுகவில் ஏற்படப்போகும் கலகத்திற்காக என்பதை காலம் உணர்த்தும். பன்னீர், சசிகலாவுடன் சமரசம் செய்துகொண்டால், பழனிச்சாமி அரசியல் வாழ்வு முடிவுரை காணலாம்.  ஆனால், பழனிச்சாமியும் சளைத்தவரல்ல.

சவால்கள் நிறைந்த தேர்தலுக்கு பின்னான களத்திற்கு தமிழகம் தயாராகும், கூடவே பன்னீர் அடித்து ஆடத்தொடங்குவார்.