சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர்: தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்

Must read

சென்னை:

மிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவின்போது வழங்கப்படும்  முட்டை கொள்முதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை ரத்து செய்தது  உள்ளது.

பள்ளிகளில் செயல்பட்டு வரும்  சத்துணவு மையங்களில் வழங்கப்படும் முட்டை கொள்முதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்தது. அதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2017-18 ஆண்டுக்கு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்கு பெறுவதை தடை செய்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி டெண்டருக்கு தடை விதித்து வெளி மாநில கோழி பண்ணைகளையும் அனு மதிக்கக் கோரி கரூரை சேர்ந்த வாசுகி கோழி பண்ணை உள்பட 4 கோழிப் பண்ணைகள் சார்பில்  வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணையை தொடர்ந்து இன்று இறுதி விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து  தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் தமது உத்தரவில், அரசாணை முறையாக இல்லை என்றும், பல்வேறு பாகுபாடுகள் உள்ளதாகவும் கூறி, அதனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.

முட்டை வழங்குவதில் பாதிப்பு இல்லாத வகையில், இதுவரை யார் முட்டை வழங்கி வருகிறார்களோ அவர்களிடம் அதே விலையில் அதே எண்ணிக்கையில் முட்டை வாங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article