சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3வது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு முடிவடைந்த நிலையில், கட்சி தலைமை அலுவலகமான ஆழ்வார்பேட்டையில் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி உரையாற்றினார்.

அப்போது,   தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி ஏறிக்கொண்டிருப்பதாகவும், நீதி மய்யம் என்னும் குடும்பம் பரவி உள்ளது.  மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என கூறினார்.

அதைத்தொடர்ந்து இன்று இரவு திருவாரூரில் நடைபெற உள்ள முதலாண்டு பொதுக்கூட்டத்தில் சென்ற கமல்  விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக நிலவும் அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலவரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கமல், தமிழகத்தில் மெகா கூட்டணி எது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 3வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

மேலும்,  மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி வரும் 24ம் தேதி தொடங்கப்படும் என்றவர், வேட்பாளர்கள் தேர்வில் இளைஞர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படும் மற்றும் அவர்களது  வயது, கல்வித் தகுதி ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில், திமுக, பாமக, பாஜக, புதிய தமிழகம், தமகா போன்ற கட்சிகள் ஒரு அணியாக உள்ள நிலையில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் மற்றொரு அணியாகவும் திரண்டு உள்ளன.

இந்த நிலையில், டிடிவி தினகரனின் அமமுக மற்றும் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஓரணியாக திரள வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகள் கருதுகிறார்கள்.

இதுவரை தேமுதிக எந்தவொரு கட்சியிலும் சேராமல் உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம், டிடிவி அணியுடன்  கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும், இவர்களுடன் மேலும் சில உதிரி கட்சிகளும் சேரலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த அணி 3வது அணியாக பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்றும், அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு கடுமையான நெருக்குதல்களை  கொடுக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.