டெல்லி: பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக 10 மாநிலங்களில் சிபிஐ இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக ஏற்கனவே முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா, ஆன்ந்த் சுப்பிரமணியன் உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று, இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள், வர்த்தகர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 10 மாநிலங்களைச் சேர்ந்த 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் நிா்வாக இயக்குநராக பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணா பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டாதாக புகார் எழுந்தது. பங்குச்சந்தை விவரங்கள் ‘ஓபிஜி செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குத் தரகு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தெரிவித்து பங்கு சந்தை தொடா்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிா்ந்ததாகவும் செபி தெரிவித்தது. இதுதொடர்பாக, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதமும், ஆனந்த சுப்பிரமணியன் மற்றும் தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிா்வாக இயக்குநா் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ. 2 கோடி அபராதமும், தேசிய பங்குச் சந்தை தலைமை குறைதீா்ப்பு அதிகாரி வி.ஆா்.நரசிம்மனுக்கு ரூ. 6 லட்சம் அபராதமும் செபி விதித்தது. தொடர்ந்து, இந்த முறைகேடு தொடா்பாக, ஆனந்த் சுப்பிரமணியனை பிப்ரவரி 25-ஆம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணாவை மாா்ச் 6-ஆம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். அவா்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.
இந்த நிலையில், பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குடன் சம்பந்தப்பட்ட சில பங்குச்சந்தை இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை, காந்திநகர், டெல்லி, நொய்டா, குருகிராம் மற்றும் கொல்கத்தா உள்பட 10 மாநிலங்களைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.