மும்பை

குடியுரிமை சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடுகள் இந்தியப் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்பி உள்ளதாக ராஜ் தாக்கரே கூறி உள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.   மேற்கு வந்த மாநிலம்,  கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை தங்கள் மாநிலத்தில் அமல் படுத்த்ப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனையின் தலைவரான ராஜ் தாக்கரே “இந்தியாவில் ஏற்கனவே 135 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.  எனவே மேலும் மக்களை ஏற்க முடியாத நிலையில் நாம் உள்ளோம்.   எனவே அகதிகளை ஏற்று அவர்களுக்கும் குடியுரிமை அளிப்பது நாட்டுக்கு அதிகப்படியான சுமை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.  அரசு முதலில் தனது நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.

தற்போது இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.  மேலும் வீழ்ச்சி அடைய நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.  அதைச் சீர் செய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.   மாறாகக் குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு போன்றவற்றை அறிவிக்கிறது.  வங்கதேசத்தில் இருந்து பாகிஸ்தானில் இருந்தும் வந்தவர்களை நாம் விரட்ட வேண்டியது தேவைதான்.  ஆனால் இந்த சட்டங்களால் அது நிறைவேறுமா என்பது தெரியவில்லை.

மத்திய அமைச்சர் அமித்ஷா கிளப்பி உள்ள இந்த குடியுரிமை விவகாரங்களால் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சீரழிவைப் பொதுமக்கள் மறந்துள்ளனர்.   இதற்காகவே அவர் இத்தகைய திட்டங்களை அறிவித்துள்ளார்.   இதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்.  தனது தந்திர நடவடிக்கைகளால் மக்களின் கவனத்தைத் திசை திருப்பு தனது அரசின் இயலாமையை மறைத்துள்ளார்.

அவருக்கு எதிராகப் பல இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர்.  அவர்களில் உண்மையான இந்திய இஸ்லாமியர்கள் யார் மற்றும் வெளிநாட்டில் இருந்து ஊடுருவியவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும்.   குறிப்பாக மராட்டிய இஸ்லாமியரால் மாநிலத்தில் எங்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை.  மக்களுக்கு இது குறித்து எல்லாம் தெரியும்.  ஆனால் மக்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் சரியான நடவடிக்கை எடுக்க இயலாத நிலையிலுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.