சென்னை:
நவம்பர் 1ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதன்முதலாக அரசு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, கவியரங்கம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி பிரிந்து சென்றன. இந்த நாளை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்ற தமிழக அரசு, ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, அதற்காக ரூ. ரூ 10 லட்சம் நிதியையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், வரும் நவம்பர் 1ந்தேதி (இன்று) தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காலை முதலே பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து, 4.30 மணி அளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் விழா நடைபெறுகிறது.