சென்னை:
கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2-ம் தவணை தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்கள், சமுதாய நல மையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என மொத்தம் 12 லட்சத்து 93 ஆயிரத்து 775 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பல தடுப்பூசி மையங்களில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், முதல்தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2-ம் தவணைபோட முடியாமல் அவதிப்படுகின்றனர். சென்னை அபிராமபுரம் பகுதியில் 2-ம் தவணை கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருந்தனர்.

பின்னர், தடுப்பூசி இல்லை என தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடந்த 3 நாட்களாகவே இதுபோல் நடந்ததால், சுகாதார அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் கிடைக்கின்றன, ஆனால் இன்னும் சிலருக்கு இந்த் தடுப்பூசி கிடைக்க வில்லை. எனவே, கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள், http://covid19.chennaicorporation.gov.in/covid/Registration/index.jsp என்ற மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவித்துள்ளது. மேலும் அதில் கோவாக்சின் தடுப்பூசி கிடைத்த உடன், நாங்கள் உங்களை அணுகுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.