சென்னை:
மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். அதே போல மேற்க்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து ஜூலை 31 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும்.

இந்த மீன்பிடி தடைக்காலங்களில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்பவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவ குடும்பங்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண தொகையான மீனவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.