சென்னை:
கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிசன் வசதிகள் கொண்ட 200 படுக்கைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

கோவையில் கொரோனா தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 3 ஆயிரத்துக்கும் குறையாமல் உள்ளது. பாதிப்புக்குள்ளாகும் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு இருந்து வருகிறது.

பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே உள்ளன. கோவை அரசு மருத்துவமனை யிலும் இதே நிலை நீடிக்கிறது.

இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பதை தவிர்க்க 15 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளுடன் ‘ஜீரோ டிலே’ வார்டு அமைக்கப்பட்டது. அந்த 15 படுக்கைகளும் நிரம்பி வருவதால், கோவை அரசு மருத்துவமனைக்கு தனியார் தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட 2 பேருந்துகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, பலர் ஆம்புலன்ஸ் களில் காத்திருக்கின்றனர். எனவே, “நோயாளிகள் காத்திருப்பை தவிர்க்க மருத்துவமனைக்கு அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு கொரோனா சிகிச்சைப் பிரிவுஅமைப்பதற்கான பணிகள் துரித மாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிசன் வசதிகள் கொண்ட 200 படுக்கைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ மற்றும் அரசு மருத்துவமனைகளில் தொடரும் ஆக்சிசன் படுக்கைகளின் தட்டுபாடுகளுக்கு , இந்த மையம் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.