500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி மறுப்பு: மக்கள் ஏமாற்றம்

Must read

டெல்லி:

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி கிளைகளில் மறுப்பு தெரிவிப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

புழக்கத்தில் இருந்த உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது அவர் டிசம்பர் 30ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வங்கி கணக்குகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை செலுத்தி விட வேண்டும்.
அதற்கு பின்னர் ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் அபிடவிட் சமர்ப்பித்து மார்ச் 31ம் தேதி வரை செலுத்தலாம் என்று கூறியிருந்தார். இதே அறிவிப்பை செய்திகுறிப்பாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது.

வங்கிகளில் செலுத்துவதற்கான காலக்கெடு முடிந்ததை தொடர்ந்து நேற்றும், இன்றும் ரிசர்வ் வங்கி கிளைகளுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் ரூபாய் நோட்டுக்களுடன் குவிந்தனர். ஆனால் ரிசர்வ் வங்கியில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பணமதிப்பிறக்க அறிவிப்பு அமலில் இருந்த 50 நாட்களுக்கு வெளிநாடுகளில் தங்கியிருந்தவர்களுக்கு மட்டுமே பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றி கொடுக்கப்படும் என கூறினர். இதனால் மக்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர்.

பணமதிப்பிறக்க அறிவிப்பு இருந்த காலக்கட்டத்திலேயே தினமும் புது புது அறிவிப்புகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட்டு வந்தது. சமயங்களில் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புக்கு மாற்றாக வேறு அறிவிப்புகளை வெளியட்டு வங்கி ஊழியர்களையும், மக்களையும், வர்த்தகர்களையும் குழப்பி வந்தது.

தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள சமயத்தில் வழக்கம் போல் முறையான அறிவிப்பு இல்லாமல் மக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

More articles

Latest article