சென்னை:  திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி, தேர்தல் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி.40 மட்டுமல்ல இந்த நாடும் நமதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில்   இன்று வெளியிட்டார்.  தொடர்ந்து, 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். இரண்டையும் ஒரே நேரத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி, தேர்தல் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி,  திராவிட முன்னேற்ற கழகத்தில் தேர்தல் அறிக்கை என்பது தேர்தலின் மிக முக்கிய அங்கமாக எப்போதும் இருந்துள்ளது. தலைவர் கலைஞர் தொட்டு ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை சந்தித்து, தேர்தல் அறிக்கை என்பது மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்று அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

இன்று அண்ணன் தளபதி நாடாளுமன்ற தேர்தலுக்காக பாரம்பரியம் இருக்க கூடிய தேர்தல் அறிக்கையை உருவாக்க கூடிய பொறுப்பை, அந்த குழுவின் தலைமையை என்னிடம் ஒப்படைத்ததற்குகாக வருக்கு எண்ணுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தொடர்ந்து பெறுமையாக சொல்லக்கூடிய திராவிட மாடல் ஆட்சி. அந்த திராவிட மாடல் ஆட்சியின் நாயகனாக இருக்க கூடிய நம்முடைய முதலமைச்சர், நம்முடைய பெரியவர்கள் பெரிய பெரிய விசியங்களை, செயற்கரிய செயல்களை செய்வார்கள் என்று நாம் எப்போதும் செல்லுவோம். இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் போது தான் நம்முடைய முதலமைச்சரின் ஆட்சி, இந்த குறுகிய காலத்திற்குள் எத்தனை சாதனைகளை செய்துள்ளது என்பதை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. தேர்தல் அறிக்கையில் நம்முடைய சாதனைகளை போட்டால் அதற்கே சரியாகிவிடும் என்பதால் பல சாதனைகளை குறைக்க வேண்டியிருந்த அவசியத்தையும் நாங்கள் பார்த்தோம்.

ஒவ்வொருவரையும் தொடக்கூடிய ஆட்சியாக, தமிழ்நாட்டில் இருக்ககூடிய அத்தனை பேரின் வாழ்க்கையையும் மாற்றக்கூடிய ஆட்சியாக நம்முடைய முதலமைச்சரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆட்சியில் இந்த தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு, அடுத்து இந்த திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் நம்முடைய முதலமைச்சவர் கொண்டு செல்வதற்கு வரக்கூடிய தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை இந்த நாட்டில் உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த நாடு காத்திருக்கிறது. நிச்சயமாக வரக்கூடிய தேர்தலில் தமிழகத்தில் இருக்க கூடிய 40 மட்டுமல்ல இந்த நாடும் நமதாக இருக்கும் என கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில், திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், தொழிற்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, அரசு தலைமை கொறடா & வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் பிப்ரவரி 5-ம் தேதி முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர். இதன் பிறகு, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்த முறை கதா நாயகியாக கூட இருக்கலாம் என்று கனிமொழி ஏற்கனவே கூறி இருந்தார்.