லக்னோ:

உ.பி. தேர்தலில் முஸ்லிம்கள் போட்டியிட வாய்ப்பு வழங்காதது தவறு என மத்திய பாஜ அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களை திட்டமிட்டு பா.ஜ புறக்கணித்திருப்பது அம்பலமாகியுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் உமாபாரதி கூறுகையில், ‘‘உ.பி. தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாமல் பாஜ மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்த முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு முஸ்லிம் உறுப்பினரையாவது சட்டமன்ற உறுப்பிராக்க வேண்டும் என்று தேசிய தலைவர் அமித்ஷா, மாநில தலைவர் கேசவ் பிரசாத் ஆகியோரிடம் வலியுறுத்தினேன். இதை ராஜ்நாத் சிங் ஏற்றுக் கொண்டார். முஸ்லிம்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று அவரும் ஒப்புக்கொண்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று என்ன லாஜிக் இருக்கிறது என்று பாஜ.க ராஜ்யசபா உறுப்பினர் வினய் கத்தியார், உமாபாரதிக்கு கேள்வி எழுப்பியுள்ள அவர்,‘‘ நமக்கு முஸ்லிம்கள் வாக்களிக்காத பட்சத்தில் ஏன் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்றும தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங், உமாபாரதியை தொடர்ந்து மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும் உ.பி. தேர்தலில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 7 கட்ட தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு முடி ந்த பிறகு இத்தகைய கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் 8ம் தேதி நடக்கிறது.

ஆட்சிக்கு வந்தால் அனைத்து சமுதாய மக்களும் சம அளவில் நடத்தப்படுவார்கள் என்று பாஜ பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், தற்போது முஸ்லிம்களுக்கு சீட் வழங்குவதிலேயே அந்த கட்சிக்குள் ஒத்த கருத்து இல்லாதது தற்போது தெரியவந்துள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி முஸ்லிம்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.