சென்னை,

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆனால்,தமிழக அரசின் உறுதியான முடிவு தெரியாததால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.,நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு.

நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகள் அகில இந்திய அளவில் நடைபெறுகின்றன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட்) நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவகவுன்சில் ஒப்புதலின்படி நடைபெறும் தகுதித் தேர்வு ஆகும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் சேர்வதற்காக, தமிழ் உள்பட 8 மொழிகளில் இந்தத்தேர்வு நடத்தப்படுகிறது.

எனினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு பிறப்பித்தது.

ஆனால், இந்த ஆண்டு இதுவரை அப்படி ஏதும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்காத நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

இந்த ஆண்டு  ‘நீட்’ நுழைவுத் தேர்வு இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அசாம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது

தமிழக அரசு இயற்றியுள்ள  நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்கும் சட்டமசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கான முடிவு இதுவரை எட்டப்படாத நிலையில், நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழப்பமான நிலையில், தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதாக இன்றைக்குள்ளாக உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மாணவர்களிடையே நிலவுகிறது.

 

இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவபடிப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.