சென்னை: தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கவன தீர்மானத்தின்மீது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி நிதிநிலை அறிக்கையும், 20ந்தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடந்து பட்ஜெட்மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (பிப்.22) நிறைவுபெறுகிறது.
இன்றைய தினம் சபை தொடங்கியதும் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துரை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது, காவிரி விவகாரத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் கவலை அளிக்கிறது என்றும், கர்நாடகாவைஆளும், பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர் என்று கூறினார். மேலும், மேகதாது விவகாரம் சேர்க்கப்பட்ட ஆணைய கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள்? அதில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்றும் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ், மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி தடை ஆணை பெற வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது. இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நீர் பங்கீட்டு பிரச்சனைகளை தீர்வு காண மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆணையத்திற்கு நீண்ட காலம் தலைவர் நியமிக்கப்படாமல் இருந்ததால் பிரச்சனை ஏதும் வரவில்லை. ஆனால், தற்போது தலைவர் நியமிக்கப்பட்டு கடந்த பிப்.1-ந்தேதி கூட்டம் நடைபெற்றது. அதில்தான் பிரச்சினை எழுந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தியதுடன்,டும் எதிர்ப்பை பதிவு செய்தது உள்ளனர். மேகதாது பற்றி பேச கேரள அரசும், மத்திய பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும், மேகதாது குறித்து விவாதம் மட்டுமே நடைபெற்றது வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும், மேகதாது விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சுட்டிக்காட்டியவர், மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு என்று கூறியதுடன், மேகதாது தொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலஅரசு, மேகதாதுவில், தமிழ்நாட்டில் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறியவர், அங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியானாலும், பாஜகவாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர். அதனால், மேகதாது அணை குறித்து யாரும் அஞ்ச தேவையில்லை என்றும், மேகதாது அணை கட்டுவதை தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் அனுமதிக்காது. மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை எங்களுக்கும் உள்ளது என்று அவர் கூறினார்.