சென்னை: என்னுடைய வீட்டில் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை என 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டு குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
என்னுடன் அறிமுகமான நபர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி, பணம் பறிமுதல் செய்து அதற்கும், எனக்கும் தொடர்பு சொன்னால் நியாயமா? என்னிடம் இருந்தோ, என் மகன்களிடம் இருந்தோ அல்லது என் மனைவியிடம் இருந்தோ, வருமான வரித்துறையினர் ஒரு ரூபாய்கூட கைப்பற்றவில்லை என்றார்.
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை, கரூர், கோவை, விழுப்புரம் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. கடந்த 3ந்தேதி தொடங்கிய சோதனை 7ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த சோதனையின்போது ஏராளமான பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில், ஐடி சோதனை முடிந்தபிறகு தனது மகனுடன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு ,ரெய்டு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
என்னுடைய கோப்புகளை பார்க்கும் உதவியாளர் சுப்பிரமணி மற்றும் எனது டிரைவரிடம் 5 நாட்களாக கேள்வி என்ற பெயரில் வருமான வரித்துறையினர் மன உளைச்சலை உருவாக்கி விட்டார்கள். கண்ணீர் வரவைக்கும் வகையில் கேள்விகளால் துளைத்து விட்டார்கள்.
நான் தனியாக வசித்து வருகிறேன். எனது மனைவி தனியே வசிக்கிறார். எனது மகன்கள் இருவரும் தனித்தனியே வசிக்கிறார்கள். அனைவருமே வருமான வரியை சரியாக கட்டி வருகிறோம். ஆனால் அனைவரிடமுமே வருமான வரித்துறையினர் கேள்விகளால் துளைத்தெடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இறுதியாக நான் தங்கியிருந்த கல்லூரிக்கே வந்து, சல்லடை போட்டு ஆய்வும் நடத்தினார்கள். என்னை தொடர்புபடுத்தி விழுப்புரம், வந்தவாசி, கரூர், கோவை, திருவண்ணாமலையில் பல இடங்களில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். எல்லோருமே பயந்து போயிருக்கிறார்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகள் மீது எனக்கு கோபம் இல்லை. அவர்கள் அம்புதான் . அம்பு விட்டவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். இந்த 5 நாட்கள் நடந்த வருமான வரி சோதனை தொடர்பான வெளியாகி உள்ள கற்பனை கதைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன்.
நான் ஒன்றும் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. இந்த மண்ணுக்கு சொந்தகாரன். நான் அடிப்படையில் விவசாய வீட்டு பிள்ளையை சேர்ந்தவன் என்பது அனைவருக்கும் தெரியும்.
சென்னை வந்து படத்தொழிலில் ஈடுபட்டேன். பல திரைப்படங்களுக்கு வினியோகஸ்தராக இருந்தேன். பட தயாரிப்பாளராகவும் ஆனேன். இப்படி நான் ஈட்டிய பணத்தின் மூலம்தான் என்னுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் என்ற பெயரில் அறக்கட்டளையை 1991-ம் ஆண்டு தொடங்கினேன். இந்த அறக்கட்டளையின் நிறுவனராக இருந்து அதன் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களை நாங்கள் உருவாக்கினோம்.
இந்த பகுதியில் நாங்கள் தொடங்கிய கல்லூரிகளால் பல என்ஜினீயர்கள் உருவாகி உள்ளனர். தொழிற்புரட்சி ஏற்பட்டது. நான் பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்துக் கொண்டிருப்பவன். என் வீட்டிலோ, என் மனைவி வீட்டிலோ அல்லது எனது 2 மகன்கள் வீட்டிலோ, கல்லூரி வளாகத்திலோ ஒரு பைசா கூட பறிமுதல் செய்திருந்தால் கூட அதற்கு பொறுப்பேற்று பதில் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
எனது மூத்த மகன் குமரன் தான் சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். எனக்கும் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனக்குள்ள சொத்து என்றால் 48 ஏக்கர் 33 செண்டு நிலம் இருக்கிறது. காந்திநகரில் உள்ள எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஒரு மருத்துவமனைக்காக 33 ஆண்டுகள் லீசுக்கு வழங்கியுள்ளோம். சென்னையில் ஒரு வீடு உள்ளது. இது மட்டும் தான் எனக்கான சொத்து. இதைத்தான் தேர்தல் பிரமாண பத்திரத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.
அமைச்சர் பதவிக்கு வந்தபிறகு ஒரு செண்டு நிலம் கூட நான் சொத்தாக சேர்த்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறைக்கு எனது வரவு செலவு கணக்கை சரியாக தாக்கல் செய்து வருகிறேன். வருமான வரித்துறையை ஏமாற்றுபவன் அல்ல நான்.
என்னிடம் மக்கள் மனு அளிக்க வருவது தவறா? என்னுடன் தொடர்புபடுத்தி அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது நியாயமா? பா.ஜ.க.வில் தொழில் அதிபர்களே இல்லையா… அங்கெல்லாம் வருமான வரித்துறை போகிறதா? தி.மு.க. மீது மட்டும் வருமான வரித்துறையினர் ரெய்டுக்கு வருவது ஏன்?
இந்த ரெய்டுக்கெல்லாம் நாங்களோ, தி.மு.க.வோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ பயப்பட போவது கிடையாது. ரெய்டு மூலமாக எங்களை அடக்கிவிட முடியாது. இந்த ரெய்டால் 5 நாட்கள் எனது அரசுப்பணி முடங்கி இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவையே பார்த்தவர். அவரது அரவணைப்பில் இருப்பவர்கள் நாங்கள். வருகிற பாராளுமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு. அந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை வென்று காட்டுவதே குறிக்கோள். அந்த குறிக்கோளை முன்வைத்தே நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
முந்தைய காலங்களில் வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்திலும் இது போன்ற சோதனைகள் நடைபெறவில்லை. ஆனால், தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசு எதிர்கட்சிகளை அச்சுறுத்திப் பார்க்கிறது” என்றும் எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்த பேட்டியின்போது அமைச்சர் எ.வ.வேலுவின் மூத்த மகன் குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.