சேலம்: புதியதமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது, கூட்டணியை விட்டு தேமுதிக சென்றதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா கட்சிகள் போட்டியிடுகின்றன. கடந்த முறை கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள்கட்சி, புதிய தமிழகம், கருணாஸ், தமீமுன் அன்சாரி, கொங்குநாடு கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன.
அதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி முதல்கமுதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் உள்பட ஆறு பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதையடுத்து, 2வது கட்டமாக, 171 தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை அதிமுக தலைமை 10ந்தேதி வெளியிட்டது.
இதில், தற்போதைய அமைச்சர்களில் 23 அமைச்சர்களுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஜி.பாஸ்கரன் (சிவகங்கை), நிலோபர் கபீல் (வாணியம்பாடி), எஸ்.வளர்மதி (ஸ்ரீரங்கம்) ஆகிய மூன்று பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
நடப்பு 15-வது சட்டப் பேரவையில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் 45 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் 18 பேர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் 22 பேரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர். மேலும், மாநிலங்களவை உறுப்பினர்களாகவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் பேரவைத் தேர்தல் களம் காண உள்ளனர். அதிமுகவில் 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளுக்கு 43 தொகுதிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் புதிய தமிழகம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகிவிட்டது என உறுதிப்படுத்தினார்.
மேலும்,, “புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அங்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை. கூட்டணியை விட்டு தேமுதிக சென்றதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என்றவர், அதிமுக வேட்பாளர்களுக்கு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பிரச்னை சரி செய்யப்படும்” என்றார்.