சென்னை: கிறிஸ்துமஸ் அன்று சென்னையில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ஜனவரியில் வடகிழக்கு பருவமழை கொட்டும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருவதுடன், டிசம்பர் தொடக்கத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் புயல் மழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இந்த வெள்ளம் இன்றுவரை வடியாத சூழல் உள்ளது. இதற்கிடையில் டிசம்பர் 3வது வாரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  டிசம்பர் 25ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ,

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கும் கனமழை எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து 2வது வருடமாக கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னை (KTCC) மற்றும் கடலோர தமிழகத்தில் மழை பெய்யும். இது இனிமையான மற்றும் மகிழ்வான இலேசான முதல் மிதமான மழை வரை.
புதுக்கோட்டை- சிவகங்கை பெல்ட்டில் டிசம்பர் 27ம் தேதி தீவிர மழை பெய்த புதுக்கோட்டை காரன் ஆடியோ உண்மை இல்லை, வானிலை மாடல்கள் புரியாமல் போடப்பட்டுள்ளது. தயவுசெய்து அதை சுற்றிப்பார்க்கவோ அல்லது பார்வர்ட் செய்யவோ வேண்டாம்
வடகிழக்கு பருவமழை ஜனவரியில் கொட்டும் என்று பதிவிட்டுள்ளார்.